விடியல்

–  சித்தார்த்தன் –

1983ம் ஆண்டு மலையகத்தில் இனக்கலவரங்கள் வெடித்தன. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ்நாட்டை விட்டுக் குடிபெயர்ந்து வந்த தோட்டத் தொழிலாளரை சிங்கள இன வெறியர்கள் தாக்க, பல தமிழ்க் குடும்பங்கள் வடதிசைக்குத் தப்பி ஓடிவந்தனர். அப்படி ஓடிவந்தவர்களின் குடும்பங்களில் ஒன்று அந்தோனி, மரியம்மாவின் குடும்பம். இலங்கைத் தீவின் வடபகுதியான யாழ்ப்பாணம் தமிழர்கள் வாழும் பகுதி என்பதால் அங்கே அடைக்கலம் புகுந்தனர்.

முல்லைத் தீவை ஒட்டி இருந்த முள்ளி வாய்க்கால் பகுதியில் அந்தக் குடும்பம் குடியேறியது. மரியம்மா அப்பொழுது கர்பிணி. அந்தோனிக்கு இரக்கப்பட்டு மளிகைக் கடைக்கார கார்த்திகேசு அவருக்கு வேலை கொடுத்துத் தன் கடையில் வைத்துக்கொண்டார். மரியம்மாவின் தலைச்சன் குழந்தைக்கு அவர்கள் ஜீவா என்ற பெயரிட்டு வளர்த்தனர். அந்தோனி மெல்ல மெல்ல அங்கே காலூன்றிக் கொண்டார். முதலாளி கார்த்திகேசுவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து சில ஆண்டுகளில் தானே ஒரு மளிகைக் கடை வைக்கும் அளவுக்கு உயர்ந்தார். அந்த தம்பதியருக்கு இன்னொரு மகனும் மகளும் பிறந்தனர். கொஞ்சம் நிலமும் வாங்கிக்கொண்டு வேறூன்றிக் கொண்டனர்.

மூத்த பையன் ஜீவா அப்பொழுது பள்ளி இறுதிப் படிப்பை முடித்திருந்தான். அவனுக்கு மேலே படிக்க ஆசை. தந்தை அந்தோனியும் சம்மதிக்க, அவன் யாழ்ப்பாணத்திற்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். பல மாதங்கள் கழிந்தன. அவனிடமிருந்து தகவல் எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் போனவன் விடுதலைப் புலிகளின் கையில் சிக்கி இருப்பானோ என்று அவனது சினேகிதர்கள் ஐயப்பட்டனர். சிக்கி இருந்தால் அவர்களது ராணுவத்தில் சேர்ந்திருப்பான் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தலைமன்னாரில் அவனைப் பார்த்ததாக வேறு சிலர் சொன்னார்கள். புலிகளிடம் தப்பி தனது படிப்பைத் தொடர அவன் இந்தியா போயிருக்கலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்கள். காலம் விரைந்து கொண்டிருந்தது. ஜீவாவின் தம்பி மயூரன் இப்பொழுது பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அவனது குட்டித் தங்கை கருத்தம்மா ஏழாம் வகுப்பிலிருந்தாள். அந்தோனியும் குறிப்பாக மரியம்மாவும் மயூரனை மேலே படிக்க அனுமதிக்கவில்லை. மளிகைக் கடையிலேயே வியாபாரத்தைக் கவனிக்கச் சொல்லி விட்டார்கள். விடுதலைப் புலிகளிடம் சிக்கி அவனும் கை நழுவிப் போய் விடுவானோ என்று அவர்கள் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில் முல்லைத் தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாகத் தொடங்கியது. புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக் கடலின் நடுவே அரணமைத்துக்கொண்டார். முல்லைத் தீவே புலிகளின் கோட்டையாக மாறிக்கொண்டிருந்த நேரம்.

கருத்தம்மாவின் நினைவில் அந்த நிகழ்ச்சி நன்கு பதிந்திருந்தது. ஏனெனில் 2004ம் ஆண்டு ஸூநாமி என்ற கடல்பிரளயம் இலங்கைத் தீவின் கிழக்குக் கடற்கரையைச் சூரையாடிப் பல உயிர்களைக்கொள்ளை கொண்டு சென்றது. கடல் பொங்கியெழுந்து நந்திக்கடலையும் கீழைக் கடலையும் இணைத்துவிட்டது. நல்லவேளை முள்ளிவாய்க்கால் நந்திக்கடலின் மேற்கே இருந்ததால் தப்பியது.

ஆனால் மறு நாளே அந்தக் குடும்பத்தை மற்றொரு ஸூநாமி தாக்கியது. திடீரென்று அந்தோனியின் கடையில் இலங்கை ராணுவத்தினர் புகுந்தனர். “யாரிங்கே அந்தோனி?” என்று மிரட்டினார்கள். மயூரன்தான் கடையில் உட்கார்ந்திருந்தான். அப்பா வெளியே வந்தார். அவரைக் கையில் விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். அம்மாவும் கருத்தம்மாவும் கதறிக் கதறி அழுதார்கள். மயூரன் திக் பிரமை பிடித்தவன்போல் கல்லாய்ச் சமைந்து நின்றான்.

புலிகளுக்கு உளவு சொல்பவர் என்று நினைத்துப் பிடித்துச் செல்கிறார்கள் போலிருக்கிறது என்று மக்கள் பேசிக்கொண்டனர். விசாரணைக்குப் பின் விட்டுவிடுவார்கள் என்று நாங்கள் எங்களைச் சமாதானம் செய்து கொண்டோம். ஒரு நாளாயிற்று, சில நாட்கள் ஆயின, பல நாட்களாயின. ஆனால் அப்பாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஒருவேளை சுட்டுக் கொன்றிருப்பார்களோ? அப்படியிருக்காது. சிறையில் தான் போட்டிருப்பார்கள். விடுதலைப் புலிகள் சொல்வது சரியாகத்தான் இருக்குமோ என்னமோ. மலையகத்தில் தோட்ட வேலை செய்து பிழைத்து எங்களைத் துன்புறுத்தியதும் சிந்துச் சிங்கள வெறியர்கள்தானே. விடுதலைப் புலிகள் இவர்களை விடமாட்டார்கள். ‘ஆண்டவனே! புலிகள் வென்று இவர்களைத் துரத்தி யடித்துவிடவேண்டும் என்று அந்தக் கள்ளம் கபடமற்ற சிறுமி மனதிற்குள் கர்த்தரை வேண்டிக் கொண்டாள்.

இப்பொழுதெல்லாம் அண்ணன் மயூரன் கடையில் அதிகம் உட்காருவதில்லை. ஊர் சுற்றுகிறான். அம்மாவும் நானும்தான் கடையைப் பார்த்துக்கொள்கிறோம். அப்பாவை சித்ரவதை செய்து கொன்றிருப்பார்கள் என்று நினைத்துக் கண்ணீர் விடுகிறாள் கருத்தம்மா. ஒரு நாள் மயூரன் அம்மாவிடம் சொன்னான் ‘இந்தச் சிங்களப் பேய்களைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும். அதற்கு ஒரே வழி விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து போராடப்போகிறேன்” இந்த முடிவுடன் மயூரன் வீட்டைவிட்டு வெளியேறினான். கருத்தம்மாவும் அவள் தாயும், கடையும் அனாதையாகிவிட்டன.

இந்த நிலையில் சில மாதங்கள் கழிந்தன. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் உச்சக்கட்டத்தை எட்டியது. கருத்தம்மா பள்ளியிலிருந்து தன் தோழிகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். திடீரென விடுதலைப் புலிகள் அந்தச் சிறுமிகளைச் சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி ஒரு முகாமுக்கு இட்டுச் சென்றனர்.

அந்த முகாமில் இருந்த தலைவன் அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களிடம் அவர்களது குடும்பச் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டான். பின்னர் அவர்கள் அனைவரையும் கூட்டி ஒரு சின்னப் பிரசங்கம் செய்தான்.

“இன்று ஒரு கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?  அதன் காரணம் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்காது. இந்த இலங்கைத் தீவின் சட்டப்படி தமிழர்களாகிய நாம் சம உரிமைகள் கொண்ட பிரஜைகளல்ல. இந்த நாட்டில் நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால்தான் நமது தலைவர் பிரபாகரன் இந்த நாட்டின் காட்டாட்சியிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார். சிங்களப் பேய்கள் அவ்வளவு எளிதில் நமது சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுவிடுவார்களா? அதனால்தான் நமது தலைவர் பிரபாகரன் எந்தத் தியாகம் செய்தும் விடுதலை பெற்று விடுவது என்ற முடிவுடன் போராடிக்கொண்டிருக்கிறார். இது ராமராவண யுத்தம். ராவணனைச் சேர்ந்த அரக்கன் படைகள் நம்மீது கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். போர் விமானங்கள் வானமெங்கும் சூழ்ந்து நம்மைப் பூண்டோடு அழித்துவிட முயலுகிறது.

ஆனால் சுயமரியாதை பெரிதே அன்றி சோறு பெரிதல்ல. இந்தத் தமிழ்மக்களை எளிதில் அடக்கிவிடமுடியாது என்பதை அவர்கள் ஒரு நாள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். இந்த நாட்டில் ஒரே ஒரு தமிழன் மிஞ்சினாலும் அவர்களது ஆதிக்க வெறிக்குச் சவால் விடுவான்.

இந்தப் போரில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போராடினால்த்தான் சிங்களப்பேய்களிடமிருந்து விடுதலை பெறமுடியும் சிங்கப்பூர், அயர்லாந்து போல எத்தனையோ குட்டி நாடுகள் இந்த உலகத்தில் உண்டு. அவர்களெல்லாம் தன்னாட்சி பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்பொழுது தமிழர்களாகிய நாம் வாழமுடியாதா? இந்தச் சமரத்தில் நாம் எப்படியும் வெற்றி பெற்றேயாக வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம். நீங்கள் ஒவ்வொருவரும் அதில் பங்கு பெறுவீர்கள்.

இன்று முதல் உங்கள் அனைவருக்கும் போர் பயிற்சி அளிப்போம். நாட்டு விடுதலைப் போரில் ஆண்களுக்கு நிகராக நீங்களும் ஆயுதம் ஏந்திவிட்டால், சிங்களப் பேய்களிடமிருந்து நமது விடுதலை நிச்சயம்!”

சிறுமிகளான எங்களுக்கு அரைகுறையாகக் கொஞ்சம் புரிந்தது. இருந்தாலும் அம்மா குடும்பத்தினரையெல்லாம் பிரிந்து எப்படித் தனியாக இந்தப் புதிய சூழ்நிலையில் வாழ்வது என புதிராகவே இருந்தது.

‘எங்களையெல்லாம் காட்டில் வளைத்துப்பிடித்து வந்துவிட்டீர்களே. நாங்கள் இங்கே இருக்கிறோம் என்ற தகவல் கூட அவர்களுக்குத் தெரியாதே” என்று கருத்தம்மா குரல் எழுப்பினாள்.

“அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உங்கள் வீடுகளுக்கு நாங்கள் தகவல் அனுப்பாமலா இருப்போம்.’ என்ற தலைவருடைய குரல் அவர்களை அடக்கிவிட்டது.

சில மாதங்கள் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்தவும், சுடவும், ஒளிந்து தாக்கும் போர் முறைகளெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்டது. மிஞ்சிய ஒரே உறவான தாயைப் பிரிந்துவந்த அவளது மனம் படாத பாடு பட்டது. அதோடு அந்த முகாமில் அவர்கள் நடத்தப்பட்டமுறை பயங்கரமாக இருந்தது. பயிற்சி நாட்களில் நரகவேதனையை அனுபவித்தனர்.

பயிற்சி முடிவடைவதற்கு முன்னரே அவர்களுக்குப் போருக்கான அழைப்பு வந்துவிட்டது. மாங்குளத்திலிருந்து இலங்கை ராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்ததாகத் தகவல் கிடைத்ததால் விடுதலைப் புலிகளின் ராணுவம் மாங்குளத்தை நோக்கி முன்னேறியது. அந்த ராணுவத்தின் முன்னோடிகளாக இந்தச் சிறுமியர் படையும் அனுப்பப்பட்டது. முன்னணியில் முன்னேறிவந்த சிறுமியர் பட்டாளத்தை சிங்கள ராணுவம் சுட்டுத்தள்ளியது. அந்த சிறிமியர் படை குற்றுயிரும் குலையுயிருமாக ரத்த வெள்ளத்தில் மிதக்க சிங்கள ராணுவம் முன்னேறியது.

கருத்தம்மாவுக்கு நினைவு திரும்பியபோது மெல்லக் கண்விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் இன்னும் உயிரோடு இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளது நினைவு திரும்பியபோது, தாங்கள் துப்பாக்கி ஏந்தி நடைபோட்டு முன்னேறியதும் சிங்கள ராணுவம் அவர்களை நோக்கிச் சுட்டதும், கண்முன்னேயே பல சிறுமிகள் செத்துவிழுந்ததும், அப்படி விழுந்தவர்கள் பின்னால் வந்த தன்மேல் சாய்ந்ததும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அதை நினைவு படுத்துவதுபோல் அவள் வலது கரத்திலும் காலிலும் பயங்கரமான வலியை உணர்ந்தாள். தன்மேல் சாய்ந்த தன் தோழிகளின் சடலங்களின் கனத்தை உதறிக்கொண்டு எழுந்தாள்.  கையில் பயங்கர வலி. ஆனால் எழுந்து நடக்க முடிந்தது. அருகிலிருந்த புதருக்குச் சென்று பதுங்கிக்கொண்டாள். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது.

சிங்கள ராணுவம் அவர்களைக் கடந்து சென்று விட்டிருந்தது. கையில் பயங்கரவலி. அவர்கள் ராணுவத்துடன் மோதிய இடம் முள்ளிவாய்க்காலிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரம் இருக்கும் மனதில் உறுதியுடன் அவள் முள்ளிவாய்க்கால் செல்லும் சாலையில் நடக்க ஆரம்பித்தாள். ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் மரத்தின்பின் பதுங்கிக்கொள்வாள்.

சுமார் 3 மணிநேரம் நடந்தபின் முள்ளிவாய்க்காலில் தனது கூட்டை அடைந்து கதவைத் தட்டினாள். இரவுநேரம். அவளது தாய் கதவைத் திறக்க பயந்தாள். யாரது, யாரது என்று கலவரத்துடன் கேட்டாள். நான்தான் கருத்தம்மா, என்று குரல் கொடுத்தாள் அவள்.  அவளது தாய் பரபரப்புடன் கதவைத் திறந்தாள். கருத்தம்மாவை மறுபடியும் உயிருடன் பார்த்தபின் அவளது சந்தோஷம் கரைபுரண்டது. அவளை அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

“இப்பொழுதெல்லாம் நான் அம்மாவை பிரிந்து வெளியே செல்வதே இல்லை. முள்ளிவாய்க்கால் கிராமத்தில் புலிகளின் நடமாட்டமும் ராணுவ நடமாட்டமும் அதிகரிக்க மக்கள் குடிபெயர்ந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். கடையில் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. நான் கடையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு வாட்டசாட்டமான இளைஞன் கடையில் ஏதோ சாமான் வாங்க வந்தான். அவனுக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும். என்னிடம் பேசுவதற்காகவே பேச்சை வளர்த்துகொண்டிருந்தான்.

“இங்கே கடை வைத்திருக்கிறீர்களே. இது மிகவும் ஆபத்தான இடமாச்சே” என்று பேச்சைத் தொடங்கினான்.

“இது விடுதலைப் புலிகளின் கோட்டையைhச்சே. எங்களுக்கென்ன பயம்? எனது அண்ணன்மார் இருவரும் புலிப்படையில் இருக்கிறார்களாக்கும்”

“அப்படியா! உங்கள் அப்பாதான் இந்தக் கடையை நடத்துகிறாரோ?”

“ஆம் அவர் இப்பொழுது சரக்கு எடுக்கப் போயிருக்கிறார்”

“அப்பா வரும்வரை நீ கடையைப் பார்த்துக்கொள்வாயாக்கும், ஊர் நல்லா இல்லே, யாராவது கலாட்டாப் பண்ணினா என்ன செய்வே!”

“எவன் வந்து கலாட்டாப் பண்ணுவான்? என்கையிலே துப்பாக்கி இருக்கே, அதுவும் பேசும்! ஆமாம் இவ்வளவு நேரம் பேச்சை வளக்கிற நீ யாருன்னு சொல்லலியே”

“நானா? நான் சாதாரணமா மீன் பிடிக்கிற செம்படவன். முல்லைத் தீவு கடற்கரையிலேதான் எங்கவூடு!”

பேச்சுக்குரல் கேட்டு உள்ளே இருந்து மரியம்மா கடைக்கு வந்தாள். அப்பனும் அண்ணனும் போனபின் வீட்டில் முன்பகுதிக்கே கடையை மாற்றி விட்டிருந்தார்கள். அந்தப் பேச்சுக்களில் அவளும் கலந்துகொண்டாள். சிறிது நேரத்தில் அந்த இளைஞனும் சரளமாகப் பேச ஆரம்பித்தான். மரியம்மாவுக்கும் அந்தப் பிள்ளையைப் பிடித்தது. அவளது எண்ணமும் கருத்தம்மாவின் எண்ணமும் புரிந்து அந்த சந்திப்பு கருத்தம்மாவுக்கும், இளைஞன் கருத்திருமனுக்கும் திருப்புமுனையாகியது. விரைவில் அந்த ஊர் சர்ச்சில் அவர்கள் இருவரும் தம்மபதிகளானார்கள்.

கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. முல்லைத் தீவின் கடற்கரைப் புறம் அமைந்த முனவர் குப்பம் சுறுசுறுப்படைந்து கொண்டிருந்தது. கட்டுமரங்களில் கடலுக்குள்போக மீனவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்தக் குப்பத்தின் குடிசைகளிலிருந்து பனிப்படலம் போன்று லோசன புகை மேலெழுந்து கொண்டிருந்தது. அடுப்புகளில் சோறு தயாராகிக் கொண்டிருப்பதை அது உணர்த்தியது.

கருத்தமாவுக்கும் கருத்திருமனுக்கும் திருமணமாகி ஒரு வருஷம் இருக்கும். அவர்கள் புது மணவாழ்க்கை சீராகவே போய்க்கொண்டிருந்தது. “சோறு ஆக்கியாச்சா?” என்று கேட்டுக்கொண்டே குடிசைக்குள் நுழைந்தான் கருத்திருமன். அடுப்படியில் குனிந்து சோற்றை வடித்துக்கொண்டிருந்த கருத்தம்மா அவளை முகமலர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்து, “நீ பல்லு விளக்கிட்டு வறதுக்குள்ளாறெ சோத்து மூட்டை ரெடியாகிடும்” என்று புன்முருவல் பூத்தாள். முகம் கழுவி, பல்விளக்கி, மீன் பிடி வலையைத் தோளில் போட்டுக்கொண்ட அவனது கையில் சோற்று மூட்டையைத் திணித்தாள் கருத்தம்மா.

“வாரேன் புள்ளே’ என்ற அன்பு ததும்பப் பார்த்த கருத்திருமன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு கட்டு மரத்தைநோக்கி நடக்கலானான். அவனுக்காகக் காத்திருந்த அவனது சகாக்கள் அவனும் வந்து சேர்ந்து கொண்டபின் தங்களது சோற்று மூட்டைகளை கட்டு மரத்தில் பத்திரப்படுத்தி விட்டு கட்டு மரத்தைக் கடலுக்குள் தள்ளிவிட்டு துடுப்புபோடத் தொடங்கினார்கள்.

அவன் கட்டு மரத்தை நோக்கிப் போவதைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த கருத்தம்மா அவர்களது கட்டுமரம் அலைகளில் மிதந்து அலையெழுப்பும் இடத்தைத் தாண்டும் இடம் வரை பார்த்துக்கொண்டிருந்தாள். அதன்பின் பலகட்டுமரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடலுக்குள் புகுந்து கண்ணுக்கு புலப்படாத புள்ளிகளாகி மறைந்து கொண்டிருந்தன.

‘என்ன அப்படி வெச்ச கண் வாங்காமெப் பார்த்துக்கிட்டே நின்னுட்டே!” என்று செபமாலை அவளை நனவுலகத்திற்குக் கொண்டுவந்தாள். திரும்பபிப் பார்த்த கருத்தம்மா அவளது அண்டை வீட்டுக்காரி செபமாலையைக் கண்டதும் சற்று நாணி, “ஒண்ணுமில்லை அக்கா! அவுக ஒடம்புக்கு சுகமில்லை. ராத்திரி மூச்சுடும் ஒரே இருமல், இன்னிக்கும் போக வேண்டாம்னு சொல்லிப் பாத்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்லைனுட்டுக் கிளம்பிட்டாரு!”

“அப்படியெல்லாம் பாத்தா பொளைப்பு நடக்குமா பொண்ணே!

அன்னாடம் நாலுகாசு பாத்தாத்தானே வண்டி ஓடும்? சரி! நீ எபப்படி இருக்கே? என்று கேட்டாள் செபமாலை. அவள் சற்று முதியவள். அவளுடைய கேள்வியில் கரிசனம் தெரிந்தது. கருத்தம்மா பிள்ளை உண்டாகி இருப்பது அவளுக்குத் தெரியும்.

கருத்தம்மாவுக்கு சுமார் 18 அல்லது 19 வயது இருக்கும். கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது. இதுவரை வாழ்க்கை இன்பகரமாகவே நகர்ந்து கொண்டிருந்தது. கருத்திருமனுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. மூன்று மாதமாக அவள் முழுகாமல் இருந்தாள். அவள் கருப்பாக இருந்தாலும் அழகிதான். மூக்கும் முழியுமாய் குருகுருப்புடன் அலைபாயும் கண்களுடன் விளங்கினாள். ஆங்கிலத்தில் சொன்னால் ‘ஸ்மார்ட்’ என்ற வகை.

கருத்திருமனின் முன்னோர்கள் நெடுங்காலமாக முல்லைத் தீவில் வசிப்பவர்கள். இந்தத் தீவின் பூர்வகுடிகள் என்று சொல்லலாம். பரம்பரை பரம்பரையாக மீன்பிடி தொழிலில் பிழைப்பு நடத்துபவர்கள். கருத்திருமன் ஒரு ‘ஜாலியான’ ஆசாமி. அவனுக்குப் பேசப்பிடிக்கும். தனது பேச்சுத் திறத்தாலே அல்லவா கருத்தம்மாவைக் கவர்ந்தான்.

மாலை நேரங்களில் கருத்தம்மா கடற்கரைப் பக்கம் சென்று கருத்திருமனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பாள். பொழுது சாய்வதற்கு முன் அவன் திரும்பிவிட்டால் அவளது மனது சந்தோஷப்படும். நேரம் ஆக ஆக மனதில் கொஞ்சம் உதைப்பு ஏற்படும். ஒவ்வொன்றாகப் படகுகள் திரும்பும்பொழுது அவளது கண்கள் அவளைத் தேடும். ஒருநாள் மணி ஏழாகியும் அவன் வரவில்லை. அவள் மனது கலவரம் அடைந்து. கடலம்மா சகாயமேரியை வேண்டிக்கொண்டாள். ‘கடலம்மா! கருத்திருமனுக்கு ஒண்ணும் ஆகாமெக் காப்பாத்து!’ என்று. சிறிது நேரத்தில் கருத்திருமன் வந்துசேர அவள் மனம் நிம்மதியடைந்தது.

“இம்மா நேரம் ஆயிடிச்சே. நீ வந்து சேரலியேன்னு நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா?’என்றாள் அவனிடம்.

“இன்னிக்கு செமையா மீனுங்க வலையிலே சிக்கிச்சுங்க. நல்ல வேட்டை. நேரம் போனதே தெரியலை. மேகே பாத்தா சூரியன் கீழே ரொம்ப தூரம் இறங்கிடிச்சு. அப்புறம் தான் விழுந்தடிச்சுக்கிட்டு கரையை நோக்கிப் படகைத் திருப்பிவிட்டேன். ஒவ்வொரு மீனும் எம்மாம் பெரிசுங்கறே? அதுங்களைப் பாத்தா ஒங்கண்ணைப் பாக்கற கணக்கிலே இருந்திச்சு!” என்று கருத்திருமன் அவளைச் சீண்டினான்.

“அப்படீன்னா ஏங்கண்ணு ரௌண்ட் ரௌண்டா முட்டை முட்டையா இருக்குதுன்னு சொல்றியா?” அவள் செல்லமாகச் சிணுங்கினாள்.

“அப்படிச்சொல்லலைம்மா. மதுரை மீனாட்சின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி ஒங்கண்ணு மீனு கணக்கா இருக்குதுன்னு சொல்ல வந்தேன். உனக்கு மீனம்மான்னே பேருவெச்சிருக்கலாம்! நம்ப வாழ்ககையே மீனை நம்பித்தான் இருக்குது. என் வாழ்ககையும் இந்த மீனை நம்பித்தான் இருக்குது” என்று அவளது கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினான்.

அவன் மனம் தனது தாயை நினைத்தது. கடலிற்குள் மீன்பிடிக்கச் சென்ற அவனது தந்தை ஒரு புயலில் காணாமல் போய்விட்டார். தாய் தான் அவனை மீனையும் பிரானையும் சுமந்து, அவனை வளர்த்து ஆளாக்கினாள். பிறகு அவனும் அண்டை அயலார் உதவியுடன் அந்தத் தொழிலில் தேர்ச்சி பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்கிறான். ஆனால் 2004ல் வந்த ஸுனாமி என்ற பிரளயம் அவனது தாயை விழுங்கிவிட்டது.

அதன்பின் அக்கா ஸ்தானத்தை ஏற்று அவனை அரவணைத்தவள் செபமாலை அக்காதான் அவனது தாய்ஸ்தானத்திலிருந்து அவனது கல்யாணத்தை நடத்தி அவனைக் குடியும் குடித்தனமாக வாழச் செய்தவளும் அந்த செபமாலை அக்காதான்.

“என்ன ரோசனையிலே முளுகிட்டே” என்று அவனைக் கருத்தம்மா நனவுலகுக்குக் கொண்டுவந்தாள்.

“ஒண்ணுமில்லே. ஆயியையும் அப்பனையும் நினைச்சுக்கிட்டேன். மனசு ஒரு மாதிரி ஆயிடிச்சு” என்றான் அவன். இந்தச் சோகக் கதையை அவள் முன்பே அவளிடம் சொல்லி இருக்கிறான். கருத்தம்மாவும் அந்த பயங்கர ஸுனாமியை நினைவு படுத்திக் கொண்டாள்.

“அதே ஸுனாமிக்கு அடுத்த நாள் தான் எங்கள் அப்பாவை ராணுவம் இழுத்துச் சென்றது. அதன்பின் நாங்கள் அவரைப் பார்க்கவில்லை காணாமல் போய்விட்டார்.  மூத்த அண்ணன் அதற்கு முன்பே காணாமல் போய்விட்டான். அப்பா போனபிறகு இரண்டாவது அண்ணணும் புலிகளுடன் சேர்ந்து காணாமல் போய்விட்டான். உனது ஆயி அப்பன் கூட கடல் சீற்றத்தால் காணாமல் போய்விட்டார்கள்.”அவள் பெருமூச்செறிந்தாள்.

“அதையெல்லாம் நினைச்சு இப்ப என்னசெய்ய? சந்தோசமான விஷயத்தைப் பேசுவோம், என்ற கருத்திருமன் கைகால் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான். கருத்தம்மா பரிமாறிக்கொண்டே அவள் சாப்பிடுவதை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் பேச்சுக் கொடுத்தாள் கருத்தம்மா.

“நம்ம குழந்தையின் பிள்ளைப்பேறுக்கு எங்க ஆயீ வீட்டுக்குப் போகனும்னு ஆசை” என்றாள் அவள்.

“ஆயீதான் இப்ப முள்ளிவாய்க்கால்லே இல்லியே. கடையை வந்த விலைக்கு வித்துட்டு கிளிநொச்சிக்குப் போயிட்டாகளே! அவங்களே அவுக தங்கை வீட்டிலே இருக்காங்க. ஒன்னை எங்கே பாத்துக்க முடியும்? கிளிநொச்சி கொஞ்ச தொலைவு இல்லே. நானும் ஒன்னை அடிக்கடி வந்து பார்க்க முடியாதே. ஒண்ணு செஞ்சா என்ன? ஒங்க ஆயியையே இங்கே வரச்சொல்லிட்டா என்ன. பக்கத்திலே துணைக்கு செபமாலை அக்காவும் இருக்காக,” என்று அவன் மாற்றுக் கருத்தை வைத்தான்.

கருத்தம்மாவுக்கும் கருத்திருமனின் இந்த யோசனை பிடித்தது. அவனைப் பிரித்திருக்கவும் வேண்டாம் தனது தாயை இங்கே வந்து இருக்கச் சொல்லலாம். அவள் சம்மதம் தெரிவித்தாள்.

கருத்தம்மாவின் பிள்ளைப்பேறு காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. கிளிநொச்சியிலிருந்து அவனது தாயும் வந்து சேர்ந்தாள். அண்டை வீட்டு செபமாலை அக்காவே பிள்ளைப்பேறு பார்த்த அனுபவம் மிக்கவள். கருத்தம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இருவரும் சேர்ந்து குழந்தைக்கு என்னபெயர் வைக்கலாம் என்று யோசித்தார்கள். பல பெயர்களைப் பரிசீலித்துப் பார்த்ததில் கதிர்காமன் என்ற பெயர் கருத்தம்மாவுக்குப் பிடித்தது. கருத்திருமனும் அதை ஒப்புக்கொண்டான்.

கதிர்காமன் வளர்ந்து தளர் நடைபோடத் தொடங்கி இருந்தான். கருத்தம்மா தன் தாயாரை வற்புறுத்தி அங்கேயே தங்க வேண்டிக்கொண்டாள். அவளுக்கு இருந்த ஒரே உறவு இந்த ஒரே மகளும் மாப்பிள்ளையும் தானே. அவளுக்கும் இது பிடித்தது. பக்கத்து வீட்டு செபமாலையும் நல்ல பேச்சுத் துணையாக அமைந்தாள்.

இந்த நிலையில் ராணுவத்திற்கும் புலிகளுக்குமான போர் முற்றி உச்சகட்டத்தை அடைந்தது (2008-2009).  புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் நடந்த தாக்குதலில் அழிக்கப்பட்டார். ராணுவம் புலிகளை வென்ற வெறியில் பேயாட்டம் போட்டது. கடற்கரையில் மீனவர்களை கண்மண் தெரியாமல் சுட்டது. பலியான மீனவர்களில் கருத்திருமனும் ஒருவன். தமிழர்கள் வேட்டையாடப் பட்டனர். ராணுவம் முள்ளிவாய்க்கால் போன்ற கிராமங்களில் நிரந்தரமாக முகாமிட்டு தமிழ் இனத்தையே படுகொலை செய்து கொண்டிருந்தது.

சாவின் இந்த கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து எங்கும் மரண அமைதி நிலவியது. ராணுவ நடமாட்டத்தைத் தவிர வேறு சந்ததிகளே இல்லை. ஓரிரு நாட்கள் இப்படிக் கழிந்தன. பிறகு மெல்ல மக்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். இறந்த சடலங்களைக் கடற்கரையில் தேடி அலைந்தார்கள். பெரும்பாலான ஆண்கள் கொலையுண்டதால் பெண்களே தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

செபமாலை அக்காவும் கருத்தமாவின் தாயாரும் கடற்கரையில் அலைந்து கருத்திருமனின் உடலை அடையாளம் கண்டு எடுத்துவந்தனர். எப்படியோ சிலர் உதவியுடன் அதை சகாயமாதா தேவாலயத்தில் கொண்டு சேர்த்து நல்லடக்கம் செய்தனர்.  வாழ்க்கை ஸ்தம்பித்து நின்றது. வாழ்க்கை அப்படி நிலை குலைந்து நின்ற போதிலும் காலம் மட்டும் ஒரே சீராக நகர்ந்துகொண்டுதானிருந்தது.

வயிற்றுப்பசியின் தூண்டுதலால் மறுபடியும் உயிர்வாழ இயங்கத் தொடங்கியது. சில மீன்பிடி படகுகள் கடலில் நகர ஆரம்பித்தன. போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் 40,000 சாதாரண மக்கள் கொலையுண்டனர். மிஞ்சியவர்களில் 6000 பெண்கள் இருக்கலாம். அதில் 5000 பேர் விதவைகள். அவர்கள் தான் குடும்பத்தைப் பராமரித்தவர்கள். சில படகுகள் கொண்டுவரும் மீன்களை விற்றும், பதப்படுத்தி விற்றும் வயிற்றை அரைகுறையாகக் கழுவினார்கள்.

பசிக் கொடுமையினாலும், போஷாக்கின்றி நோய்வாய்ப்பட்டும் பலர் இறந்தனர். அப்படி பலியானவர்களில் செபமாலை அக்காவும், கருத்தமாவின் தாயும் அடங்குவர். ஒரு வயது பாலகனுடன் கருத்தம்மா தனிமைப்பட்டு நின்றாள். கிளிநொச்சியில் இருந்த தனது சித்தியைத் தேடிச்சென்றாள். அவளது சித்தி வயல் வரப்புகளில் கடலை வெட்டுவதும், விவசாயக் கூலி யாகவும் வேலை செய்து பிழைத்தாள். அவளைச் சார்ந்தும் நீண்ட நாள் வாழமுடியவில்லை. குழந்தைக்கு இரண்டு வயதாகியது.

முள்ளி வாய்க்காலில் இருந்த தங்களது ஒரே உடமையான வீடு எந்த நிலையில் இருந்தது என்பதைக் கூட அவர்களால் போய்ப்பார்க்க முடியவில்லை. அந்த கிராமமே போர்க்களமாக மாறிவிட்டதால் அங்கு போகவே அஞ்சினார்கள். இப்பொழுது போர் முடிவுக்கு வந்துவிட்டது. நல்ல வேளையாக அந்த வீட்டுப் பத்திரத்தை அவள் பாதுகாப்பாக வைத்திருந்தாள். தனது இரண்டு வயதுப் பையன் கதிர்காமனை சித்தியிடன் ஒப்படைத்துவிட்டு தான்போய் முள்ளிவாய்க்கால் நிலவரத்தை அறிந்து கொண்டு வந்து பின்னர் வந்து குழந்தையை அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு கருத்தம்மா முள்ளிவாய்க்காலுக்குக் கிளம்பிச் சென்றாள்.

வீடு பாழடைந்து தான் இருந்தது. ஆனாலும் சிறிது பழுதுபார்த்தால் அதில் வாழமுடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது. வேறுசில பெண்களும் அவள் கண்ணில் பட்டனர். எப்படியும் தனது வாழ்க்கையைச் சீரமைத்துககொண்டு அந்த வீட்டில் வாழ முடிவு செய்தாள். கையிலோ எந்த மூலதனமும் இல்லை. திருப்பிக் கடைவைக்க வழியில்லை. மற்ற பெண்களுடன் பேச்சுக் கொடுத்தில் அந்த விவசாயப் பருவத்தில் சிவமணி அக்காவின் வயலில் கூலி வேலை கிடைக்கும் என்று தெரிந்தது மற்ற பெண்களுடன் அவளும் சிவமணி அக்காவின் தோட்டத்திற்குப் போனாள்.

சிவமணி அக்கா ஐந்து ஏக்கர் நிலத்தில் தற்சமயம் நெல்லும், வேர்க்கடலையும் பயிர்செய்கிறார். அந்த அக்காவின் கணவரும் போரில் காணாமல் போனவர்களில் ஒருவர். காட்டு இலாகாவினர் அவளது நிலத்தை இதுவரை ஆக்ரமித்துக்கொண்டிருந்தனர். பல ஆண்டுகள் கோர்ட் கச்சேரிக்கு அலைந்து நிலம் தனது குடும்பத்தினரைச் சேர்ந்ததுதான் என்பதை வாதாடி நிரூபித்து யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரரின் மாநில சுய ஆட்சி வந்தபின் திரும்பப் பெற்று, சில ஆண்டுகளாக விவசாயம் செய்கிறாள். பல பெண்களுக்கு வேலையும் கொடுக்கிறார்.

சிவமணி அக்கா தனது வயலில் கருத்தம்மாவுக்கு வேலையும் கொடுத்தாள். கருத்தம்h சற்று காலூன்றிக் கொண்டாள். அடுத்த சில மாதங்களில் கூளம் கூளமாக உதிந்த கூரையைக் கீற்று வேய்ந்து சரிப்படுத்திக்கொண்டாள்.

அந்த பகுதியில் ராணுவ வீரர்களின் நடமாட்டமும் ரௌடிகளின் ரகளைகளும் அங்கு வாழ்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கவில்லை. ஒவ்வொரு இரவும் என்ன நேருமோ என்ற திகிலுடனேயே வாழ்ந்தனர்.

கருத்தம்மா அன்று வயல் வேலை செய்து விட்டுத் திரும்பினாள். வீட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்திருந்தார்கள். திறந்த வீட்டில் நுழைந்து, ‘யாரையா உள்ளே, திறந்த வீட்டில் நாய் நுழைந்து கணக்கிலே?’ என்று குரல் கொடுத்தாள்.

என்னைய நாயின்னா சொன்னே சிறுக்கி! என்று குடிபோதையில் வாய்குழற வெளியே வந்தான் ஒரு ரௌடி. இவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“நீதான் இந்த வீட்டு யஜமானியா? சோக்காத்தான் இருக்கே. எனக்கும் பொஞ்சாதி கிடைக்கலே. நீதான் எம் பொண்டாட்டிகிறேன். சரிதானா?” தடுமாறிக் கொண்டே அவளை நெருங்கினான். ‘சீச்சீ, தூரப்போ!” என்று அவனை தன் முழுபலத்திடன் கீழே தள்ளிவிட்டு அவள் வெளியே வந்து ஊரைக் கூட்டி விட்டாள். தெருவிலிருந்த பெண்கள் அனைவரும் சில நிமிடங்களில் கருத்தம்மா வீட்டுக்கு முன் கூடிவிட்டனர். அந்த ஆசாமியை அடிபின்னி எடுத்து விட்டனர். விளக்குமாற்றாலேயே அடித்துப் பேய் ஓட்டுவதுபோல் ஓட்டிவிட்டனர்.

மறுநாள் வயற்காட்டு வேலைக்குப் போன பெண்கள் மத்தியில் கருத்தம்மாளைக் கையைப் பிடித்து இழுத்த ரௌடியின் அட்டகாசம் பற்றிய பேச்சுதான். கூலி வாங்க கருத்தம்மா சிவமணி அக்காவிடம் போனாள். அவளுக்கு சொந்த வீடே பத்திர உணர்ச்சி அளிக்கவில்லை. ஏற்கெனவே ராணுவ ஜவான்களைக் கண்டால் பயம். அவர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. இந்த ரௌடிகும்பல் வேறு, போலீஸ் அது எங்கே இருக்கிறது. புலிகளின் ஆட்சியே தேவலை. வீட்டுக்குள் எவன் பதுங்கி இருப்பானோ என்ற திகில், அவளுக்கு வீடு திரும்பவே பயமாக இருந்தது.

கருத்தம்மாவைப் பார்த்த சிவமணி அம்மா அவளிடம் பரிவுடன் விசாரித்தாள்.

“நேற்று உன் வீட்டில் ரௌடி நுழைந்து கலாட்டா செய்தானாமே?”

ஆம் அம்மா! நல்ல வேளை மாலை நேரம்தான். நான் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டிவிட்டேன். ரௌடிகளுக்கும் ராணுவத்திற்கும் நடுவில் பெண்கள் மாட்டிக்கொண்டு விழிக்கிறோம். போலீஸ் என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.” அவள் பெருமூச்சுவிட்டாள்.

“இந்தப் பட்டாளத்துக்காரங்க எப்பதான் போய் ஒழியுவாங்களோ? அவனுக நம்ம பாதுகாப்புக்கா இருக்கானுங்க நம்பளை உளவறியத்தான் திரியுறானுக.”

கருத்தம்மாவுக்கு தனது தாயையே பார்த்த மாதிரி இருந்தது. அவளிடம் தனது சோகக் கதையைக் கொட்டி விட்டாள். ஒரு வயதுக் குழந்தையுடன் அவள் புனர்ஜன்மம் எடுத்து வாழ்ந்தபோது தனது கணவன் கருத்திருமன் வேட்டையாடிக் கொலை செய்யப்பட்டதையும் செபமாலை அக்காவும் தாயும் பசி பட்டினியில் இறந்ததையும் தனது செல்வ மகன் கதிர்காமனைச் சித்தியிடம் விட்டுப் பிழைப்புக்கு வந்த இடத்திலும் நிம்மதியாக பயமற்று வாழமுடியாத துயரத்தைச் சொல்லி அழுதாள்.

சிவமணி அக்கா பெருமூச்சுடன் தனது கதையை நினைவு படுத்திக்கொண்டாள்.

“உனக்கு நேர்ந்த சோகம் பயங்கரமானது. நல்லவேளை நான் என் பிள்ளைகளை யாரையும் பறிகொடுக்கவில்லை. கணவர் காணாமல் போய்விட்டார். நானும் தேடாத இடம் இல்லை!” சிறிது மௌனத்திற்குப் பின சிவமணி அக்கா ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

“எங்க நாத்தனார் பையன் லட்சணமான பையன். பத்து வயது இருக்கும். குளித்து சீவிச் சிங்காரிச்சு சும்மா ராஜா கணக்கிலே இருப்பான். அப்போ, போரின் உச்சக்கட்டம். பங்கரில் வாழ்க்கை நடந்தது. ‘அத்தே! எனக்கு ரொம்ப பயமா இருக்கு அத்தே’ என்றான் குழந்தை. “பயப்படாதே கண்ணு நாம பங்கர்லே தான் பத்திரமா இருக்கோம். நமக்கு ஒண்ணும் ஆயிடாதுனு ராணுவக் காரங்க கூட சொல்லிஇருக்காங்க”என்று அவனுக்கு தைரியம் சொல்லிக்கிட்டே இருந்தேன். பாரு அவிங்க அம்மா ‘ஓ’ ன்னு அலறினாள். “ஒரு குண்டு அவன் தலையை ஊடுருவிக்கொண்டு சென்றது. குழந்தை செத்துவிழுந்தான்.”  சிவமணி அக்காவின் மனத்திரையில் மறுபடியும் அந்த சம்பவம் ஓட, அவள் தடுமாறி நின்றாள்.

“ஆனால் உன் துயரத்தின் முன்னால் என் துயரம் ஒண்ணுமில்லை கருத்தம்மா! நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதே. உனக்கு இப்பல்லாம் இருந்த இருபத்திரெண்டு வயசு இருக்கும்? ஒரு ஆம்புளைத் துணை இல்லாமெ நீ இருக்கிறது சரியில்லே. ஒம்பிள்ளையையும் கூட்டியாந்து வெச்சுக்க.”

கருத்தம்மாவுக்கு இந்த யோசனை நினைத்துப் பார்க்கத் தக்ககதாவே படவில்லை. மௌனமாகக் கூலி வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள். இரவெல்லாம் யோசித்து யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளைப்போல் அவள் மறுநாள் வேலைக்கு சென்றாள்.

சிவமணி அக்கா மறுநாளும் கூலி வாங்கச் சென்ற போது அவளை,  “கருத்தம்மா! நேற்று நான் சொன்னதைப் பற்றி யோசித்தாயா?” என்று கேட்டாள்.

“யோசித்தேனம்மா! ஆனால் அப்படி ஒரு ஆள்கிடைக்கணுமே!” என்றாள்.

“அப்படிச் சொல்லு! அதுக்கு நான் ஒரு நல்ல ஆளைப் பாத்து வெச்சிருக்கேன். கழனிவேலை செய்யற சிவத்தம்பியை நீ பாத்திருப்பே. நல்ல பிள்ளை. தப்புத்தண்டாவுக்குப் போகாது. என்ன சொல்றே?”

கருத்தம்மாவுக்கும் இப்பொழுது சிவத்தம்பியின் உருவம் மனதில் வந்தது. சிவமணி அக்காவுக்குத் தன்மேலுள்ள கரிசனத்தை எண்ணி வியந்தாள். விரைவில் இருவரும் தம்பதிகளாகி குடித்தனம் நடத்தத் தொடங்கினார்கள்.

சிவதம்பியின் சொந்த ஊர் அனுராதபுரத்திற்கு வடக்கிலிருந்த லவுனியா. அவனது குடும்பம் விவசாயக் குடும்பம். தந்தைக்கு கொஞ்சம் நிலமிருந்தது. அவனுடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள். சிவதம்பி மூத்த பையன். அந்தக் குடும்பம் நிலத்தை நம்பி ஜீவனம் நடத்திய குடும்பம். தாயும் தந்தையும் ஏற்கெனவே காலமாகி விட்டதால் சிவத்தம்பியும் அவன் தம்பிகளும் விவசாயத்தை கவனித்துக்கொண்டனர். தாய்த்தந்தையர் உயிருடனிருந்த பொழுதே சிவத்தம்பிக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இரண்டாவது தம்பி கொழும்பில் கடை வைத்திருந்தான். கடைசித்தம்பி விடுதலைப் புலிகளின் படையில் சேர்ந்துவிட்டான். இந்த நிலையில் முன்னேறிவந்த சிங்களப் படைகள் இவர்களது நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களைவிரட்டிவிட்டது. சிவதம்பி தன் மனைவி கண்ணம்மாவுடன் நாடோடியாக கூலிவேலை செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். வன்னிக்கு அவர்கள் குடிபெயர்ந்து சென்றனர். வன்னியில் தனது நோய்வாய்பட்ட மனைவியைப் பறிகொடுத்தான். போர் முடிந்து அமைதி நிலவிய போது முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேர்ந்தான்.  சிவமணி அக்கா தனது மீட்கப்பட்ட நிலத்தில் அவனை வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.

சிவத்தம்பியையும், கருத்திருமனையும் ஒப்பிட்டால் சிவதம்பி சற்று அமைதியான சுபாவம் கொண்டவன். கருத்திருமனைப்போல் கலகலப்பான சுவாவம் கொண்டவனல்ல என்றாலும் மனதில் ஆழ்ந்த அன்பும் பண்புகளும் கொண்டவன்.

கருத்தம்மாவால் மனதிற்குள் தனது வாழ்க்கையோடிணைந்த அந்த இரு ஆண்களையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. கருத்திருமனுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கை அவளது வசந்தம். அதிரடியாக அவனைப் பறித்துக்கொண்ட விதி வேறொரு விதத்தில் அவளுக்கு இப்பொழுது உதவியிருக்கிறது. நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. தனது துன்பங்களுக்கு விடிவே இல்லையோ என்று திகைத்த அவளுக்கு மறுபடியும் ஒரு மனதுக்கு இசைந்த புது வாழ்வு கிடைத்தது ஆறுதலளித்தது. சிவதம்பி தன்னிடம் வைத்திருந்த அன்பின் ஆழம் அவளை நெகிழச் செய்தது.

இருவரும் கருத்தம்மாவின் வீட்டில் மறு வாழ்வு துவங்கினார்கள். அவள் மனது தனது செல்வன் கதிர்காமனின் நினைவாகவே இருந்தது. மீண்டும் அவள் கருவுற்ற பொழுது, கதிர்காமனைத் தன்னிடம் அழைத்துக்கொள்ள நினைத்தாள். இப்பொழுது அவனுக்கு மூன்று வயது. தன்னிடம் அழைத்துவைத்துக்கொண்டால் அவனை எப்படி சமாளிப்பது என்று மலைப்பாக இருந்தது. தனது மறுமணத்தைப் பற்றி சித்தியிடம் கூறியபோது, சித்தியே அவளிடம் சொன்னாள் “கதிர்காமனைப் பற்றிக் கவலைப்படாதே. உனது பிள்ளைப்பேறு காலம் வரை அவன் இங்கேயே இருக்கட்டும். நான் பார்த்துக்கொள்கிறேன்.” அது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. பிள்ளைப் பேறுக்கு சித்தி கதிர்காமனையும் அழைத்து வந்திருந்தாள் கைக்குழந்தை சற்றுப் பெரிதாகும்வரை கதிர்காமனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்வதாக அழைத்துச் சென்றுவிட்டாள். கருத்தம்மாவுக்கு வருத்தம்தான். மனதைக் கல்லாக்கிக்கொண்டு குழந்தையைப் பிரிந்தாள்.

கருத்தம்மாவுக்கும் சிவத்தம்பிக்கும் ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மயில்வாகனன் என்று பெயரிட்டு வளர்த்தனர். கிளி நொச்சியில் இருந்த சித்தியிடம் அவளது மூத்த பிள்ளை கதிர்காமன் வளர்ந்து கொண்டிருந்தான். எப்பொழுதாவது தொலைபேசியில் பேசுவான். ‘அம்மா! என்னை எப்பக் கூட்டிப்போறே’ என்று கேட்பான். ‘இன்னும் கொஞ்ச நாள் பொறு’ என்று மட்டும் சொல்லுவாள். அவள் வந்து நிலைகொள்ள ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பின் கல்யாணம், பிள்ளைபேறு, கைக்குழந்தை இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சிவத்தம்பியிடம் இதுபற்றிப் பேசியதில் அவன் குழந்தையை அழைத்துவர எந்தத் தடையும் சொல்லவில்லை.

மறுநாள் சிவதம்பியே கருத்தம்மாவிடம் கதிர்காமனைப்பற்றிய பேச்சை எடுத்தான்.

“கருத்தம்மா, கதிர்காமனை பள்ளிக்கூடத்தில் போடனும் எத்தனை நாளைக்குத்தான் சித்தியிடம் விட்டு வெச்சியிருக்கிறது? நாம போயி அவனை இங்கே கூட்டியாந்துடலாம், என்ன சொல்றே?”  என்று கேட்டான்.

“ஆமாங்க நானும் இப்ப அதேயேதான் நினெச்சேன்“ என்றாள் அவள். சிவத்தம்பியின் பெருந்தன்மை அவளைச் நெகிழச் செய்தது.

அன்று அவள் சித்தியிடம் பேசினாள். இருதினங்களில் அவள் வந்து குழந்தையை அழைத்து வருவதாகவும் சொன்னாள். குழந்தை கதிர்காமனிடமும் பேசினாள்.

“கதிர்! ஒன்னைய முள்ளி வாய்க்காலுக்கு அழைச்சிக்க வரேண்டா! இங்கே உனக்கு வெளையா ஒரு தம்பி கூட இருக்கான்! என்றாள்.

“நிஜம்மாமா?”

பல தடவைகள் அவள் தனது பேச்சைக் காப்பாற்றவில்லை என்பதால் ‘நிஜம்மா’ என்பதற்கு அவ்வளவு அழுத்தம் கொடுத்தான்.

“நிஜம்மா! சாமி சத்தியமா” என்ற உறுதி அளித்தாள் அவள்.

சிவத்தம்பிக்கு சிவமணி அக்கா தோட்டத்தில் அனேகமாக முழுநேர வேலை கிடைத்துவிடும். கருத்தம்மா காலை 6 மணிக்கு சாப்பாட்டு மூட்டையுடன் கிளம்பினால் மாலை 7 மணிக்குத்தான் திரும்புவாள். வயலிலோ, கொல்லைக்காட்டில் கச்சணத்தில் கடலை பறிக்கும் வேலையாக இருந்தாலும் ஒரு நாள் கூலி 600ரூ (இந்திய ரூபாய் 270). தமிழ் குடும்பங்களில் ஆண்டுவருமானம் சுமார் 10000 இந்திய ரூபாய்கள் தான். இந்த வேலை பருவம் சாhந்ததுதான். குழந்தை மயில்வாகனனைப் பக்கத்து வீட்டு ஆயா பொறுப்பில் விட்டுப்போவாள். தனது தாயில்லாத குறையை அவள் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். இப்பொழுது தனது மகன் கதிர்காமனுக்கும் ஐந்து வயதாகப் போகிறது. அவனையும் அழைத்து வந்தால் சமாளிப்பது பற்றியும் அவள் மனதில் திட்டம் போட்டாள். அவனை எப்படியும் பள்ளிக் கூடத்தில் போடவேண்டும்.

ஒரு நாள் எடல்ராணி என்ற நடுவயதுப் பெண் இவர்கள் வசித்த தெருவிற்கு வந்தார். அவர் ஒரு சமூக சேவகி. சிரிசேனா ஆட்சிக்கு வந்தபின் ராணுவத்தின் கெடுபிடிகுறைந்து மக்கள் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்து வந்தநேரம். மாலைக் கடற்காற்று மெல்லென மேனியைத் தழுவிச் சென்றது. முழங்கால் வரை நீண்ட கவுண் அணிந்த பெண்கள் கருத்தம்மாவின் வீட்டு வாசலில் கூடினார்கள். கடலைக்காய் பறித்த கொல்லையில் கருத்தம்மாவைச் சந்தித்த எடல்ராணி அவளுடன் அவள் வசித்த பகுதிக்கு அவர்களது நிலைமையை நேரில் காண வந்தாள்.

சிறிது நேரம் அவர்களுடன்பேசி அவர்கள் நிலையை அறிந்தாள்.

“கருத்தம்மா மற்றவர்கள் சார்பில் பேசினாள். இந்த நந்திக் கடல்கரைப் பகுதியை பிரான்வங்கிம்பாங்க. பிரான் மீன் ஏராளமாய் இருந்த இடம். இந்தியாவிலிருந்து வரும் டிராலர்கள் மீன்களை அள்ளிக்கிட்டுப் போயிடறாங்க. மீன் வளம் குறைஞ்சு போச்சு. மீன் பிடிக்க கடல்லே போறவங்களும் குறைஞ்சு போயிட்டாங்க. மிஞ்சி இருக்கிறவங்க பெரும்பாலும் பொம்பிளைங்கதான். எல்லாம் கூலிவேலை செய்யுறோம். அதுவும் கெடச்சாத்தான்.

புதுக்குடியிருப்புலே (சுமார் 20கி.மீ) துரத்திலே ஒரு தையல் தொழிற்சாலை இருக்கு. அதுலே எத்தனை பேர்தான் வேலை செய்ய முடியும்? அப்பளம் வடாம் எல்லாம் எவ்வளவு தூரம் சோறு போடும். இங்கேயே கிடைக்கிற காட்டுப் பொருள்கள்ளே எதாவது தயாரிக்க ஏற்பாடு செய்து அது தயாரிக்கக் தொழிற்சாலையும் அமெச்சா நல்லா இருக்கும். இப்ப எங்களுக்குத் தேவை வேலை’ என்றாள்.”

“அது மட்டுமல்லாமல் இலங்கையின் தென் பகுதி மீனவர்களுடனும் போட்டி போடவேண்யிருக்கிறது. மீனுங்க கொரஞ்சு போயிட்டதாலே ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேலை இல்லை. ஒரு காலத்திலே ஏராளமா மீனும் பிரானும் கெடச்சுது. பெண்கள் மீனுங்களைத் தட்டி உலத்திக் கருவாடா வித்த காலம் இருந்தது. அதிலேயும் கொஞ்சம் பணம் கிடைக்கும். இப்ப, எல்லாம் போச்சு” என்றாள் ஒருத்தி.

இன்னொரு பெண் தன் கசப்பான அனுபவத்தை விவரித்தாள்.

“சின்னக் கடைவெச்சு வியாபாரம் பண்ணலாம்னு நெனச்சேன். அநியாய வட்டிக்கு கடன்தரத்தான் எத்தனையோ கம்பெனிங்க இருக்கே. அதிலே போய் தெரியாத்தனமாக் கடன்வாங்கிட்டேன். கையைச் சுட்டுகிட்டதுதான் மிச்சம். கடனுக்குள்ளே மூழ்கிப் போயி எந்திரிச்சு வெளியே வரவே முடியல்லே. வருசத்துக்கு நாங்க சம்பாதிக்கறதே 24000 ரூவா (சுமார் 11000 ரூபாய்) மாசம் ரெண்டாயிரம் ரூவா கூட இல்லை. ஒரு கிலோ அரிசி 68 ரூவா. சக்கரை 100 ரூவா. கடல்மீனு கிலோ 500 ரூவா. தேங்காக்கு வந்த கேடு அது கூட 30 ரூவா 40 ரூவான்னு விக்குது. கடனைக் கட்டுவோமா கஞ்சி குடிப்போமா? எல்லாம் போண்டியாய் போய் கூலி வேலை செய்யறோம்.”

இன்னொரு இளம்பெண் பேசினாள், சண்டைக்கு பிறகு “புதுக் குடியிருப்பிலே மூணு தையல் தொழில் சாலைங்க வந்திருக்கு. அதிலே ஆயிரக்கணக்கிலே சின்னக் பொண்ணுங்க வேலை செய்யறோம். நாள் கூலி 250, 300 தான். புள்ளைங்கள விட்டுட்டு வேலைக்குப் போக எடம் எதுவும் கிடையாது. பச்சைப் புள்ளைங்களை வெச்சிருக்கவங்க எப்படி வேலைக்கு போக முடியும்? சண்டையிலே ஆம்புளைங்க எல்லாம் செத்துட்டாங்க. ஒண்டியாய் புள்ளைங்களை வளத்தாகணும், என்ன செய்யறது? வயசானவங்களை வேறே காப்பாத்தணும், இதுக்கெல்லாம் என்னிக்குத்தான் விடிவுகாலம் வரப்போகுதோ” என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

“வாயுள்ள புள்ளே பொழைக்கும். இந்த நிலைமையை நாம மாத்தலாம். ஆனா நாமெல்லாம் ஒண்ணாச் சேந்து குரல் கொடுக்கணும். நம்ம எல்லாம் சேந்து நம்ம எம். எல். ஏ. வையும் எம்.பி.யையும் பாப்போம். இப்ப ஆட்சிக்கு வந்திருக்கிற சிறிசேனா ஆட்சியிலே கொஞ்சம் மாற்றம் தெரியுது” என்றாள் எடல்ராணி. அவர்களுக்கு சற்று நம்பிக்கையளித்தாள். கருத்தம்மாவுக்கும் மற்ற பெண்களுக்கும் இந்த சந்திப்பு சற்று நம்பிக்கையளித்தது. மற்றவர்கள் சாப்பில் கருத்தம்மா, இப்படிப்பட்ட காரியங்களில் எடல்ராணியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தாள்.

எடல்ராணி அவர்களின் தவிப்பை உணர்ந்தாள்.  அதை அவ்வளவு தூரம் சாத்தியப்படுத்த முடியும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள். வடக்கு மாகாணத்தில் மறுசீரமைப்பு என்ற ஒரே பிரச்சினைதான் முறைத்துப பார்த்துக் கொண்டிருக்கிறது.

சுவரில் சாத்தி இருக்கும் சைக்கிளின் மறுபக்கத்தில் தலையைச் சாய்த்துக் கொண்டு ‘அம்மா’ என்று சிரிக்கிறான் மயில்வாகனன். சைக்களை மேலே தள்ளிக் கொண்டு விடப்போகிறானோ என்று பயந்த கருத்தம்மா அதோ பார் கோளிக்குஞ்சு! பிடி! என்று “சூ’ விடுகிறாள். தந்திரம் பலிக்கிறது. அவன் கோழிக் குஞ்சுகளைத் துரத்திக்கொண்டு ஓடுகிறான்.

மறுபடியும் மயில்வாகனன் சைக்கிளின் பின் சக்கரத்தின் பின்னால் நின்று கொண்டு கலகலவென்று சிரிக்கிறான். கருத்தம்மா தன் முகத்தில் செயற்கையாகக் கோபம் காட்டுகிறாள்.

கருத்தம்மா தான் அழைத்து வரப்போகும் பெரிய பையனை சிவமணி அக்காவின் தயவில் ஏதாவது பள்ளிக் கூடத்தில் போடலாமா என்று யோசிக்கிறாள். நம்பிக்கையில்தானே வாழ்க்கை நடைபோடுகிறது!

ஒரு புதிய விடியல் அவள் கண்முன் காட்சியளிக்கிறது.

Print Friendly, PDF & Email